திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர்ப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்த பிரபல சாராய வியாபாரி, மகேஸ்வரி. இவரை சுமார் 12 முறை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். இருந்தபொழுதும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு, குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தபோதிலும், அவருடைய கூட்டாளிகள் தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் அப்பகுதியில் உள்ள கோயில் திருவிழாவின்போது சாராய கும்பல் மற்றும் இளைஞர்கள் இடைய மோதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. மோதல் காரணமாக, அப்பகுதி இளைஞர்கள் தாலுகா காவல் நிலையத்தில் சாராய விற்பனை குறித்துப் புகார் கொடுத்துள்ளனர்.
அதன்பின்னர் அன்று மாலை சாராய வியாபாரியின் அடியாட்கள் சிலர், பயங்கர ஆயுதங்களுடன் வந்து அப்பகுதி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் கை,கால், மண்டைகள் உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் காரணமாக வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நேதாஜி நகர்ப்பகுதியைச் சேர்ந்த முருகனையும்(35) கைதுசெய்து, தற்போது அவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.