திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த வெள்ளை குட்டை துருஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி மங்கம்மாள். இவர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை நேரத்தில் துரிஞ்சிகுப்பம் வனப்பகுதியில் விறகு எடுப்பதற்காக சென்று உள்ளார். பின்னர், வெகு நேரம் ஆகியும் மங்கம்மாள் வீடு திரும்பாததால் அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் வனப்பகுதிக்குள் தேடி சென்று உள்ளனர்.
இரவு முழுவதும் தேடியும் மங்கம்மாள் கிடைக்காததால், மீண்டும் வனப்பகுதியில் தேடி சென்ற போது அடர்ந்த வனப்பகுதியில் மங்கம்மாள் ஆடைகள் முழுவதும் கலைந்து அவர் அணிந்திருந்த தாலி மற்றும் கம்மல்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்திருப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக கணவர் கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து ஆலங்காயம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இத்தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்காயம் காவல் துறையினர் வனப்பகுதியில் இருந்த மங்கம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சடலம் கிடந்த இடத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையிலான காவல்துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ஆலங்காயம் காவல்துறையினர் மங்கம்மாளை கொலை செய்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக துருஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் நேற்று முன்தினம் மங்கம்மாள் தனியாக வனப்பகுதியில் விறகு எடுக்க சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்று தனியாக இருந்த மங்கம்மாளை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உடனடியாக சங்கரை கைது செய்த ஆலங்காயம் காவல் துறையினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல், கோவையில் வீட்டில் தனியாக இருந்த 72 வயது மூதாட்டியை மர்ம நபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் கோவை கருத்தம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தனிப்படை அமைத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பட்டப்பகலில் இளம் பெண் கொலை: காதலன் தற்கொலை முயற்சி..திருப்பூரில் நடந்தது என்ன?