திருப்பத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த லட்சுமணன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரின் மனைவி பானுப்பிரியா (25), இவர் தினமும் திருப்பத்தூரில் உள்ள புதுப்பேட்டை ரோடு பகுதியில் சித்தாள் வேலைக்குச் செல்வது வழக்கம். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் காக்கணாம்பாளையம் கிராமம் பகுதி சேர்ந்த கட்டிட மேஸ்திரி துருவன் (27), ஆள் பற்றாக்குறை காரணமாகப் புதுப்பேட்டை ரோடு பகுதிக்கு வந்து பானுப்பிரியாவை வேலைக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
இதன் காரணமாக இவர்களுக்குள் நாளடைவில் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனவே முதல் கணவனுக்குத் தெரியாமல் பானுப்பிரியா துருவனை மூன்று நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு காக்கணாம்பாளையம் பகுதிக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் மாற்றுச் சமுதாய பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகக் கூறி திருமணமானவர்களைத் துருவன் வீட்டார் வீட்டில் சேர்க்கவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக பானுப்பிரியாவுக்கும் துருவனுக்கும் தகராறு ஏற்பட்டதால் மனம் உடைந்த பானுப்பிரியா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.