திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தரபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகரின் மகன் சசிகுமார் (38). இவரது மனைவி பிரியா (28). இவர்கள் இருவரும் காதலித்து 2008ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பிரதீப் (11), பிரித்திகா (8) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
சசிகுமார் வெளிநாட்டுக்குச் சென்று கடந்த ஆகஸ்ட் மாதம் சொந்த ஊருக்கு வந்துள்ளார். பிரியா தனியாக செல்போனில் அடிக்கடி பேசிவந்ததால் சசிகுமாருக்கும், பிரியாவுக்கும் தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. நேற்று முன்தினம் (டிச. 08) குடிபோதையில் சசிகுமார் மீண்டும் மனைவி பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் சசிகுமார் கட்டிலில் படுத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு சுமார் 11 மணியளவில் பிரியா ஏற்கனவே வாங்கி வைத்திருந்த 2 லிட்டர் பெட்ரோலை கணவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
அலறியடித்து ஓடியபோது அருகில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகள் மீது தீ பரவியது. பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 80 விழுக்காடு தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவந்த சசிகுமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இரண்டு பிள்ளைகளும் தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இது குறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் பிரியாவை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் தான் உல்லாசமாக இருப்பதற்குத் தடையாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட ஒரு மாத காலமாக திட்டம் தீட்டியதாகவும், அதனடிப்படையில் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரைக் கைதுசெய்து, அவர்மீது கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் அருகே மினி சரக்கு லாரி கடத்தல் - பைக்கில் வந்த கும்பல் கைவரிசை!