திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் மற்றும் ஆலங்காயம் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்து முன்னணி, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பாக ஆங்காங்கே சுமார் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு மூன்று நாள்கள் விழா கொண்டாடப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவலைக் கட்டுபடுத்த விநாயகர் சிலைகள் வைக்க அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை வெளியே கொண்டு சென்று கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள், இந்து இயக்கத்தினர், பொதுமக்கள் சார்பில் விநாயகரை வைத்து வழிபடும் விழா குழுவினர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.