திருப்பத்தூர்:வீட்டுவசதி வாரியம் பகுதி இரண்டில் 25 வருடங்களுக்கு முன்பு வாடகை வீட்டில் குடியிருந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி வாணி, மகன் கோபிநாத், மகள் சரண்யா. கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி வாணி சிறிது சிறிதாக அக்கம்பக்கத்தில் பொதுமக்களுடன் நட்பாக பழகி ஏலச்சீட்டு நடத்த ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்பத்தில் நன்றாக போய்க்கொண்டிருந்த சீட்டு, பின்பு லட்சக்கணக்கில் கொடுக்கல் வாங்கல் வரை சென்றுள்ளது. இதனால், கிருஷ்ணமூர்த்தியையும் வாணியும் முழுவதுமாக நம்பிய பொதுமக்கள் தொடர்ந்து சீட்டு கட்டுவதும் லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வாங்குவதுமாக பழக்கத்தை தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் வருகின்ற வருமானத்தில் தன்னுடைய மகன் கோபிநாத், மகள் சரண்யாவை மருத்துவம் படிக்க வைத்து இருவரையும் மருத்துவர்களாக உருவாக்கியுள்ளனர். பின்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மாட்றஹள்ளியில் சுமார் 2 கோடிக்கும் மேலான மதிப்பில் வீடு கட்டி குடி பெயர்ந்துள்ளனர்.
தாங்கள் கட்டிய சீட்டு பணம் கொடுக்கவில்லை என்றும் மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி பணத்தை ஏமாற்றியதாக 5க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், கைமாற்றாக பல லட்சங்களை வாங்கி கொண்டு திரும்ப தரவில்லை என்றும் அதற்கான காசோலைகளை தங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் புகார் அளித்துள்ளனர்.