திருப்பத்தூர்:வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 24) இரவு கெங்கையம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. கோயில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் இருபிரிவினரும் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காட்பாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் விஜய் என்ற இளைஞர் மீது புகார் கூறியுள்ளார்.
இதையடுத்து காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி கோயிலுக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் விஜய்யை தாக்கியதாக கூறப்படுகிறது. அனைவரும் முன்பு தான் தாக்கப்பட்டதால் மனமுடைந்த விஜய் நேற்று (ஏப்ரல் 26) காலை ரயில் முன் பாய்ந்து தற்கொலையால் உயிரிழந்ததாக விஜய்யின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், இதுதொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் கார்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரம்மபுரத்தில் விஜய்யின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கார்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து விஜய்யின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: நாட்டில், 3 ஆண்டுகளில் 390 லாக்அப் படுகொலை!