திருப்பத்தூர்:பாஜக அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் வகையில் துண்டு பிரசுரத்தைப் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையிலான பாஜகவினர் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாணியம்பாடி பேருந்து நிலையம், சி.எல்.சாலை, முகமது அலி பஜார் மற்றும் பல முக்கிய இடங்களில் உள்ள பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர்.
பின்னர் இதுகுறித்து வேலூர் இப்ராஹிம் அளித்த பேட்டியில், “பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால நல்லாட்சியில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்து, இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மிக விரைவில் உலகில் 3 ஆவது பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக இந்தியா மாறும். இதை அமெரிக்கா பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி நெஞ்சை நிமிர்த்தி உரையாற்றும் போது செல்லியிருக்கிறார்.
மேலும், இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கும் வாணியம்பாடி பகுதியில் மத்திய அரசின் நலத்திட்டங்களில் பயன்பெறாமல் ஒதுங்கி இருக்கின்றனர். அதற்கு காரணம் மத்திய அரசின் நலத்திடங்கள் குறித்த செய்தி இஸ்லாமியர்களுக்குத் தெரியவில்லை. மேலும் நரேந்திர மோடி என்றாலே இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்ற அடிப்படை பிரச்சாரத்தை பயங்கரவாத சக்திகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இஸ்லாமியர்கள் மீது பாஜகவினர் பாசமாக தான் உள்ளனர் என்பதை விளக்கவே பாஜகவின் 9 ஆண்டுக்கால சாதனைகளைத் துண்டு பிரசுரங்கள் மூலம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் வாணியம்பாடியில் அவர்கள் இருப்பிடத்திலேயே வழங்கி வருகின்றோம். மேலும் நரேந்திர மோடி பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்ற போது அங்குள்ள அமீரக மன்னர் நரேந்திர மோடியை ஆரத்தழுவி வரவேற்று ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதை வழங்கினர்.