தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாயக்கனேரி பட்டியலின பெண் பதவியேற்பு விவகாரம்: பறை இசைத்து கண்டன ஆர்ப்பாட்டம்! - பறையிசையடித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Nayakaneri Panchayat President issue: ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரியில் ஊராட்சி மன்றத் தலைவராக பட்டியலின பெண் தேர்ந்தெடுக்கப்பட்டும், 2 வருடமாக பதவிப் பிரமாணம் செய்து வைக்காததைக் கண்டித்து விசிக உள்பட பல்வேறு தரப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Nayakaneri Panchayat President issue
பட்டியலின பெண் பதவியேற்பு விவகாரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 4:08 PM IST

நாயக்கனேரி பட்டியலின பெண் பதவியேற்பு விவகாரம்: பறையிசையடித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக இந்துமதி பாண்டியன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பட்டியல் சமூகத்தை சேர்ந்த இந்துமதி நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து மாற்று சமூகத்தினர் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் இந்துமதி பாண்டியனுக்கு தலைவர் பதவி பிரமாணம் செய்து வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இதுவரையிலும் தமிழக அரசு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் இந்துமதி பாண்டியனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை.

இதைக் கண்டித்தும், இந்துமதி பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சாதிய வன்கொடுமை நடத்திய நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், ஆம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் விடுதலைக்கழகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய கட்சிகள் அடங்கிய சமூக நீதி பொறுப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழுவினர் தமிழக அரசு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பறையிசையடித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் பேசுகையில், "நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக இந்துமதி பாண்டியன் வெற்றி பெற்றிருப்பது சட்டத்திற்கு புறம்பாக நடைப்பெறவில்லை. ஆகையால் மாவட்ட நிர்வாகம் இந்துமதி பாண்டியனுக்கு தலைவர் பதவி பிரமாணம் செய்து வைக்கலாம்.

இது தலைவராக தேர்ந்தடுக்கப்பட்ட இந்துமதி பாண்டியனின் உரிமையாகும். நீதிமன்றத்திலும் இந்துமதி பாண்டியன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க கூடாது என நீதிமன்றம் தீர்ப்பும் பிறப்பிக்கவில்லை. அவர் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பும் வழங்கவில்லை. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறதோ என்ற எண்ணம் உருவாகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் இந்நிகழ்வு குறித்து ஆராய்ந்து சட்டப்படியாக இந்துமதி பாண்டியனுக்கு தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ஆடு நனைந்தால் ஓநாய் அழுவது போல நாடு முழுவதும் சாதிய வன்கொடுமைகள் ஏராளமாக இருக்கும் பொழுது, தமிழக ஆளுநர் இந்நிகழ்வு குறித்து கருத்து கூறியிருக்கிறார். அப்படி என்றால் அவர் எல்லா சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவும் கருத்து கூற வேண்டும்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சார்ந்த மாவட்டத்தையொட்டி நடைபெறும் இச்சம்பவத்தில் அரசின் சார்பில் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும், இனிமேலாவது தமிழக அரசும், அமைச்சர் துரைமுருகனும் கூடுதலாக கவனமெடுத்து இந்துமதி பாண்டியனுக்கு நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக பதவி பிரமாணம் செய்ய ஆயத்தமாக வேண்டும். அதுதான் அவரது வயதிற்கும், அனுபவத்திற்கும், அவர் இருக்கின்ற பதவிக்கும் அழகு" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மும்பை 7 மாடி கட்டட தீ விபத்து; இதுவரை 7 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details