திருப்பத்தூர்:வாணியம்பாடி கிளைச்சிறையில், சிறைத்துறை தலைமைக் காவலர் மது அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், காவலரை பணியிடை நீக்கம் செய்ய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிளைச்சிறை காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கிளைச்சிறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர், ஜெயக்குமார். இச்சிறையில் 35 கைதிகள் உள்ள நிலையில், 1 துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில், 10 காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
சிறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் ஜெயக்குமார் மீது தொடர் குற்றங்களாக, சிறைக்கு கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் பணம் பெறுவது, அவர்களிடம் மது வாங்கி வாருங்கள் என்று கூறுவது, சிறைவாசிகளின் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் பணம் பெறுவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், வாணியம்பாடி கிளைச் சிறைச்சாலை வளாகத்தில் தலைமைக் காவலர் ஜெயக்குமார் பணியில் இருக்கும் நிலையில், மது அருந்திக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனால் சம்பவம் தொடர்பாக, ஜெயக்குமார் மீது சிறைத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், பணியின்போது அநாகரிக செயல்களில் ஈடுபட்ட தலைமைக் காவலர் மீது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
எனவே, வாணியம்பாடி கிளைச்சிறை தலைமைக் காவலர் ஜெயக்குமாரை பணியிடை நீக்கம் செய்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிளைச்சிறை காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சென்னை கனமழை எதிரொலி; குளம் போல் காட்சியளிக்கும் சாலைகள்.. தயார் நிலையில் மீட்புக் குழுவினர்!