திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சிக்கு உட்பட்ட பலகாவப்பலி பகுதியில் மலை மீது முருகன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. நாள்தோறும் இந்த பகுதியில் வசிக்கும் ஊர் மக்கள் ஒரு சிலர், மலை அடிவாரத்தில் பகல் பொழுதில் கால்நடைகள் மேய்ச்சலில் ஈடுபட்டுவிட்டு, மாலை நேரங்களில் வீடு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில், வழக்கம்போல் நேற்று (நவ.21) மாலை கால்நடைகள் மேய்ச்சலில் ஈடுபட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பியவர்கள் சிலர், முருகன் கோயில் மலை அடிவாரத்தில் உடலில் பலத்த காயங்களுடன் நிர்வாணப்படுத்தப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக திம்மாம்பேட்டை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த திம்மாம்பேட்டை காவல்துறையினர், மலை அடிவாரத்திற்குச் சென்று, அங்குக் குழியில் பாதி உடல் மட்டும் புதைக்கப்பட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டனர். மேலும் சம்பவ இடத்தில் வாணியம்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்தார்.