கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு... தோண்டி எடுக்கப்பட்ட 7 மாத சிசு - பின்னணி என்ன? திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்தவர், மனோஜ் குமார் (32). தனியார் நிதி நிறுவன ஊழியர்.
இவர், வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண்ணை கடந்த 4 வருடங்களாக காதலித்து அவருடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால் அந்த இளம்பெண் கர்ப்பமானார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள மனோஜ்குமாரிடம் கேட்டுள்ளார், அந்த இளம்பெண். ஆனால் இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்ள மனோஜ் குமார் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த இளம்பெண் கடந்த மாதம் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையறிந்த பெற்றோர், அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இளம்பெண் வயிற்றில் இருந்த ஏழு மாத சிசு உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்து, குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். உயிரிழந்த சிசுவை இளம் பெண்ணின் குடும்பத்தார் வானியம்பாடி பாலாற்றில் அடக்கம் செய்ததாக தெரிகிறது. பின்னர் கவலைக்கிடமான நிலையில் இருந்த அந்த இளம்பெண்ணை மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வந்த இளம்பெண் வாணியம்பாடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மனோஜ் குமாரை கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர் . இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், காவல்துறையினருக்கு தெரிவிக்காமல் சிசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அடக்கம் செய்யப்பட்ட சிசுவின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய முடிவு செய்த மகளிர் காவல் துறையினர் வாணியம்பாடி வருவாய்த் துறையினர் முன்னிலையில் நேற்று மயானப் பகுதிக்கு சென்று, அங்கு கடந்த மாதம் புதைக்கப்பட்ட சிசுவின் உடலை தோண்டி எடுத்தனர். சிசு புதைக்கப்பட்டது கடந்த மாதம் என்பதால் எலும்புகள் மட்டுமே இருந்தன. அதனை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டி.என்.ஏ முடிவுகள் வந்த பிறகு இந்த வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்துக்குச் செல்லும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க :காசோலை மோசடி வழக்கில் நடிகர் விஜய் பட நாயகிக்கு ரூ.500 அபராதம்! ரூ.3 கோடி மோசடி வழக்கில் உத்தரவு!