திருப்பத்தூர்: ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வில்வநாதனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆம்பூர் புறவழிச்சாலையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "மக்கள் வரிப்பணத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பணத்தில் ஊர் சுற்றுவதற்காகவே இரண்டு விமானங்களை வாங்கியுள்ளார் மோடி. ஆயிரம் கோடி ரூபாயில் புதிய பாராளுமன்ற கட்டடம் திறக்க திட்டம் வகுத்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்காமல் நிதி பற்றாக்குறை என்று கூறி வருகிறது மத்திய அரசு.
சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியபோது காவல் துறையினர் முதலில் கைது செய்தது என்னைதான். நான் தற்போது வேட்புமனு தாக்கல் செய்யும்போது 22 வழக்குகள் உள்ளன. ஆனால் ஒரு வழக்குக்கூட ஊழல் வழக்கு கிடையாது. சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தியது திமுகதான்.
தமிழ்நாட்டில் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் அதிமுகவினர் விற்றுள்ளனர். மேலும் நீட் தேர்வினால் இதுவரை 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். தற்போது செவிலியர் படிப்பிற்கும் நீட் தேர்வு கொண்டு வந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்படும்.