கலைஞர் நூற்றாண்டு விழா: பல கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி! திருப்பத்தூர்: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சுமார் 73 கோடி ரூபாய் செலவில், கிட்டத்தட்ட 14 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று (ஜூலை 17) வருகை புரிந்துள்ளார். முன்னதாக ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் தி.மு.கவினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 100 அடி உயர தி.மு.க கட்சி கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தைத் திறந்து வைத்தார். அதன்பின் வாணியம்பாடியை அடுத்துள்ள சின்னகல்லுப்பள்ளியில் இயங்கி வரும் தனியார் பெண் கலைக்கல்லூரி மாணவிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளார்.
விழாமேடைக்குச் செல்லும் வழியெல்லாம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பொது மக்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மண்டலவாடியில் அமைக்கப்பட்டிருந்த நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பலமுறை வந்துள்ளேன். ஆனால், அமைச்சராகி முதல்முறை வருகின்றேன். திமுக ஆட்சி அமைத்து 26 மாதங்களில் 260க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எல்லோருக்கும் எல்லாம் தான், திராவிட மாடல். மேலும் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் துவங்கப்படவுள்ளது.
மேலும் தமிழக முதலமைச்சர் வகுக்கும் திட்டத்தைத் தான் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தி வருகின்றனர். ஏலகிரியில் 4 கோடி ரூபாய் மதிப்பில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும், திருப்பத்தூர் மாவட்ட மக்களின் கோரிக்கை ஏற்று முதலமைச்சரிடம் நாட்றம்பள்ளியில் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க கோரிக்கை வைப்பேன்" என அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 14,253 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சார்பில் 73 கோடியே 96 லட்சத்து 67 ஆயிரத்து 843 ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் இந்த விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோரும்; ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:நடுவானில் செல்போன் வெடித்ததால் பயணிகள் பீதி... ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!