திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த குட்டி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் ரமேஷ் (27), பந்தரப்பள்ளி அருகே உள்ள கல்லுகுட்டை ஏரி பகுதியில் கிரிக்கெட் அகாடமி கோச்சிங் சென்டர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், வழக்கம்போல் கோச்சிங் சென்டருக்கு சென்று விட்டு, பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார்.
அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் சுந்தரவேல் (32), ஓசூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரும் வீட்டிலிருந்து பணிக்காக ஓசூருக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில், ரமேஷ் மற்றும் சுந்தரவேல் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் பாரதி நகர் வழியே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் இருவரும் தூக்கி எறியப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:நாட்றாம்பள்ளியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கைவரிசை! நகை, பணம் கொள்ளை!