திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம்கும்மிடிகாம்பட்டியைச் சேர்ந்தவர், ஞான மூர்த்தி (28). இவரும் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த பூந்தமிழன் (21) ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் நாரியூரில் உள்ள ஞானமூர்த்தியின் பாட்டியின் வீட்டில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்து உள்ளது.
இதனையடுத்து, இது குறித்து காவல் துறையினருக்கு ரகசிய தகவலும் கிடைத்து உள்ளது. இதனையடுத்து கந்திலி காவல் நிலைய போலீசார், இன்று (ஆகஸ்ட் 13) அதிகாலை நேரத்தில், வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஞான மூர்த்தி மற்றும் பூந்தமிழன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அப்போது, அங்கு 4 அடி நீளம் வரை வளர்ந்து இருந்த கஞ்சா செடியையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அதனை காவல் நிலையத்துக்கும் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க:ராஜஸ்தானில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு - இருவர் படுகாயம்!
இதனையடுத்து அவர்களிடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், ஞானமூர்த்தி மற்றும் பூந்தமிழன் ஆகிய இருவருக்கும் கஞ்சா பழக்கம் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், கஞ்சா விலை அதிகம் என்பதால் தாமே கஞ்சா செடி வளர்க்க முடிவு செய்த ஞானமூர்த்தி மற்றும் பூந்தமிழன் ஆகிய இருவரும், எருக்கம் செடியை வேலியாக அமைத்து தினமும் உரம் போட்டு தண்ணீர் ஊற்றி வந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், கஞ்சாவைப் பயன்படுத்துவதற்காக இளைஞர்கள் இருவரும் கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், “தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருகிறது. நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் கூட எளிதில் கஞ்சா கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட, அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு பலர் மறைவாக கஞ்சா செடியை வளர்ப்பதைப் செய்திகளில் பார்க்க முடிகிறது. இதனால் கஞ்சா செடி வளர்ப்பு தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:12 மணிநேரத்தில் 17 நோயாளிகள் உயிரிழப்பு - தானே சத்ரபதி சிவாஜி மருத்துவமனையில் தான் இந்த சோகம்!