திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியில் சாலை பணிக்காக அருகில் உள்ள பகுதியில் குழி தோண்டப்பட்டு மண் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மண் எடுத்த அந்த பகுதி மூடப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக மழை பெய்த காரணத்தால் அந்த குழியில் மழை நீர் தோங்கி காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவி ராஜேஸ்வரி மற்றும் 5 ஆம் வகுப்பு படிக்கும் மோனிகா ஆகிய இருவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துவிட்டு, மீண்டும் மாலை 6 மணிக்கு மேல் கடைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகில் மின்விளக்கு வெளிச்சம் எதுவும் இல்லாத காரணத்தால், இருவரும் எதிர்பாராத விதமாக சுமார் 10 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.
மாணவிகள் கடைக்குச் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததை கண்டு, அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் இறங்கி தேடிய போது, 2 மாணவிகளும் பள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.