தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மக்களுடன் மக்களாக கலந்தது பெருமையளிக்கிறது' - கரோனா களப்பணியில் திருநங்கைகள்! - tirupattur transgender

”நீ சொன்னால் நாங்க கேக்கனுமா?” என்ற மனப்பான்மையுடன் அணுகாமல், மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எங்களை அவர்களில் ஒருவராகப் பார்ப்பது பெருமையாக இருக்கிறது. இதேபோல ஊரடங்கு முடிந்த பின்னும் எங்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தால், சமூகத்தில் எங்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.

tirupattur transgender
tirupattur transgender

By

Published : May 14, 2020, 5:26 PM IST

Updated : May 16, 2020, 3:30 PM IST

உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் கரோனா தமிழ்நாட்டிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் அதிகளவு கரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த, அரசு அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அரசின் உத்தரவுக்கிணங்க, மாவட்டக் காவல் துறையும் சுகாதாரத் துறையும் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டத்திலும், இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் மாவட்டத்தில் பெருமளவு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இப்பணிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் (எஸ்பி), மருத்துவருமான விஜயகுமார் ஐபிஎஸ் முன்னின்று நடத்திவருகிறார். மாவட்டம் முழுவதையும் கட்டுப்படுத்த காவலர்களால் மட்டுமே முடியாது என்று கருதி, தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் எஸ்பி விஜயகுமார் அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பையேற்று அவர்களும் பாதுகாப்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

இதில் ஆச்சர்யமளிக்கும் விதமாக, யாரும் எதிர்பாரா வண்ணம் திருநங்கைகள் பலர், சமூகத்திற்கு தங்களின் பங்களிப்பைச் செலுத்தும் விதமாக தாங்களாகவே கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட முன்வந்தனர். ”இந்தச் சமூகம் எங்களை ஒதுக்கித் தள்ளினாலும், நாங்கள் சமூகத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்ற உயரிய எண்ணத்தில் முன்வந்த திருநங்கைகளுக்கு நன்றி தெரிவித்து, பணிகளில் களமிறக்கினார் எஸ்பி விஜயகுமார்.

எஸ்பி விஜயகுமார்

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்புப் பணிகளைச் செய்ய தன்னார்வலர்களுக்கும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கும் அழைப்பு விடுத்தோம். ஆனால் நாங்கள் அழைக்காமலேயே திருநங்கைகள் முன்வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

அவர்கள் ஆர்வமாக கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டது, அனைவரையும் கவர்ந்தது. இதன்மூலம் சமூகத்தில் அவர்களின் பங்கு என்ன என்பதை அனைவரையும் உணரச் செய்துள்ளது. மேலும் சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் அவர்களை அடையாளம் காணவும் உதவியிருக்கிறது” என்றார்.

காவல் துறையினருடன் இணைந்து போக்குவரத்தைச் சரிசெய்வது, மாஸ்க் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் அதன் அவசியத்தை எடுத்துரைப்பது, மாவட்ட நிர்வாகம் நடத்தும் விழிப்புணர்வு முகாம்களில் கலந்துகொண்டு மக்களுக்கு கரோனா குறித்து எடுத்துரைப்பது என அனைத்துப் பணிகளையும் திருநங்கைகள் மேற்கொள்கின்றனர்.

சாலையில் வாகன ஓட்டிகளை வழிநடத்திக் கொண்டிருந்த திருநங்கை மாலாவிடம் பேசினோம். ஏதோ சாதித்துவிட்டதைப் போல மகிழ்ச்சியாக பேச ஆரம்பித்த அவர், “மக்களுக்காக சமூகச் சேவை செய்வது மிக மிக மகிழ்ச்சியளிக்கிறது. களப்பணியில் ஈடுபட்ட பின்னர் தான், காவல் துறையினரின் கஷ்டம் புரிகிறது. எங்களுக்கு ஷிப்ட் கணக்கில் தான் வேலை கொடுக்கிறார்கள். இரவுப் பணி வழங்கப்படவில்லை.

மாவட்டத்தில் எத்தனையோ மக்கள் இருக்கும் போது, எங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பணிகளில் இணைத்துக் கொண்ட எஸ்பி விஜயகுமார் சாருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரைப் போன்று பிற துறைகளில் இருப்பவர்களும் எங்களுக்கு உதவி செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
”நீ சொன்னால் நாங்க கேக்கனுமா?” என்ற மனப்பான்மையுடன் அணுகாமல், மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எங்களை அவர்களில் ஒருவராகப் பார்ப்பது பெருமையாக இருக்கிறது. இதேபோல ஊரடங்கு முடிந்த பின்னும் எங்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தால், சமூகத்தில் எங்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்” என்று கூறி தனது பணியைத் தொடரச் சென்றார்.

களப்பணியில் திருநங்கைகள்

காலங்காலமாக ஒட்டுமொத்த சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு, அடித்தட்டு நிலையிலிருந்த திருநங்கைகளை இனங்கண்டு, மக்கள் பணியாற்ற வைத்த எஸ்பி விஜயகுமாரின் செயல் பாராட்டத்தக்கதே. இதன்மூலம் மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவரும் மற்ற மாவட்ட நிர்வாகங்களுக்கு, ஓர் திறப்பையும் அவர் உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்பது மட்டும் திண்ணம்!

இது ஒருபுறம் இருக்கையில், நாட்டுக்காக ஏற்கனவே சேவை செய்து, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களும் அதே சுறுசுறுப்புடன் பணியில் ஈடுபட்டுள்ளனர். லாரி ஒன்றை சோதனையிட்டு, அனுப்பிக் கொண்டிருந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சீனிவாசனிடம் பேசினோம். அவர், “ராணுவத்தில் 22 ஆண்டுகளாகப் பணிபுரிந்தேன். இப்போது ஓய்வுபெற்று 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. முன்பு நாட்டுக்காக சேவையாற்றினேன். இப்போது மாவட்ட மக்களின் நலனுக்காக சேவையாற்றுகிறேன். இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சீனிவாசன்

20 நாள்களாக காவலர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றேன். சாலையில் வரும் வாகன ஓட்டிகளிடம், முகக்கவசம் அணிந்து செல்லவும், பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்துகிறேன். ’விழித்திரு, வீட்டிலிரு, விலகியிரு’ என்பதைப் போல மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Last Updated : May 16, 2020, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details