திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தூய நெஞ்சக்கல்லூரி அருகில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ஊத்தக்கங்கரை வாணியம்பாடி கூட் ரோடு வரையில் 4 வழிசாலையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணிகளும் தொடங்கியுள்ளன. இதில் ரூ.299 கோடியில் பணிகள் நடக்கவுள்ளன. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு. சொன்ன திட்டங்களை எல்லாம் நிறைவேற்றியுள்ளோம்.
திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தினந்தோறும் விளம்பரம் செய்வதாக சொல்கிறார். நாங்கள் செய்ததை சொல்கிறோம், நீங்கள் சட்டப்பேரவைக்கே வருவதில்லை. நீங்களும், மக்களும் தெரிந்துகொள்ளவே பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு வருகிறோம். நாங்கள் உங்களை போல் அல்ல, திட்டத்தை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் மக்கள் மீண்டும் எங்களுக்கு வாய்ப்பு வழங்கினார்கள்.
ஏழு பேர் விடுதலை பற்றி தவறான செய்தியை ஸ்டாலின் பேசுகிறார். கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது திமுக 24 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். ஏற்கனவே 7 பேருக்கு தண்டனை நிறைவேற்றலாம் என தீர்மானம் நிறைவேற்றியவர்கள் திமுகவினர். அப்படி தீர்மானம் நிறைவேற்றிவிட்டு இப்போது ஆளுநருக்கு மனு கொடுக்கின்றனர். அவர்கள் தீர்மானப்படி ஏழு பேர் தூக்கிலிடப்பட்டு இருந்தால் மண்ணோடு மண்ணாகியிருப்பார்கள். அம்மாவின் எண்ணங்களை நிறைவேற்றும் விதமாக 7 பேர் தண்டனையை ரத்து செய்து தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்” என்றார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேலும், “வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக ஹாட்ரிக் வெற்றியை பெறும். ஸ்டாலின் மனு வாங்குகிறார், பொய்யான செய்தியை சொல்கிறார். ஒருவர் கறவை பசு கேட்டு மனு கொடுத்தால், ஸ்டாலின் கணவர் காணவில்லை கண்டுபிடித்து தருகிறேன் என்று கூறுகிறார். தேர்தல் வந்தால்தான் ஸ்டாலின் வருவார். அதற்கு பின்னர் மீண்டும் தேர்தல் வந்தால் தான் அவரை பார்க்க முடியும். 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அப்போது ஸ்டாலின் மனு வாங்கி மக்களை ஏமாற்றினார்” எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க...முதலமைச்சர் பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - சேலத்தில் பரபரப்பு