திருப்பத்தூர்:பெங்களூரைச் சேர்ந்த பார்த்தசாரதி மகன் அபினவ் (17). இவர் 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, கிடைக்கும் வேலையை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி கிராமம் அம்பேத்கர் நகரில் வசிக்கும் தனது பெரியம்மா கலைச்செல்வி வீட்டிற்குச் சென்றிருந்தார்.
அன்று மாலை அபினவ் மற்றும் அவரது பெரியம்மா மகன் முகேஷ் (23) இருவரும் இருசக்கர வாகனத்தில் அருகே உள்ள பால்நாங்குப்பம் கிராமம் வரை சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். வாகனத்தை முகேஷ் ஓட்டிச் சென்றார். அப்போது அம்பேத்கர் நகரைச் சேர்ந்த குமார் (30), தயால் (27) மற்றும் ராகுல் (23) ஆகிய மூவரும் சேர்ந்து முகேஷ் வந்த வாகனத்தை வழிமறித்து தகராறு செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு மோதலில் முடிந்தது.
இதனால், ஆத்திரமடைந்த மூன்று பேரும், அன்று இரவு சுமார் 8 மணியளவில் அபினவ்வை இருள் சூழ்ந்த பகுதிக்கு கடத்திச் சென்று சரமாரியாக கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்தனர். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த முகேஷ் மற்றும் தாய் கலைச்செல்வி இருவரையும், மூன்று பேர் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். உடனடியாக அக்கம், பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.