திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கொல்லகொட்டாய் என்ற பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான வீடு பல நாட்களாக பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தியின் பூட்டிய வீட்டில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக அப்பகுதி மக்கள் ஆம்பூர் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
செம்மரக்கட்டைகள் பறிமுதல்:இந்தத் தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினரின் கொல்லகொட்டாய் பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்கு விரைந்தனர். பின்னர், பூட்டியிருந்த அவரது வீட்டிற்குள் செம்மரக்கட்டைகள் இருந்ததை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
வீட்டின் உரிமையாளருக்கு வலைவீச்சு:இதனைத்தொடர்ந்து ஆம்பூர் நகர காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் பதுக்கி வைத்து இருந்த, சுமார் ஒரு டன் அளவிலான செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், செம்மரக்கட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியை வனத்துறையினர், தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
தடுப்பணையில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு:இது அவ்வாறு இருக்க, வாணியம்பாடி அருகே கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்ற 8 வயது சிறுமி தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர், முத்துவேல். இவர் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திரா எல்லைப்பகுதியான புல்லூர் தடுப்பணை (The Pullur dam) பகுதியில் உள்ள கனகநாச்சியம்மன் கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிடச் சென்றுள்ளார்.