திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஆம்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, உரிய ஆவணங்கள் இல்லாததால் காவல் துறையினர் முகிலனின் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர், முகிலன் தனது குழந்தைகளுக்கு மருந்துகள் வாங்குவதற்காகத்தான் இருசக்கர வாகனத்தில் வந்ததாகத் தெரிவித்தார். எனவே, தனது இருசக்கர வாகனத்தைத் திருப்பித் தருமாறு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், காவலர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த முகிலன், காவலர்கள் கண்முன்னே தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.
இதில் உடல் முழுவதும் 90 விழுக்காடு காயங்களுடன் நெடுஞ்சாலையில் மயங்கி விழுந்தார். பின்னர் காவலர்கள், அப்பகுதி மக்கள் ஆகியோர் தீயை அணைத்து கவலைக்கிடமான நிலையில் இருந்த முகிலனை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் முகிலனை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து வேலூர் சரக டிஐஜி காமினி ஆய்வு மேற்கொண்டார்.