5 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், சிவராஜ் பேட்டை பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு திருப்பத்தூர்:திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் பேட்டை 3வது வார்டுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்தவர் சுமித்ரா (35). இவர் பிரித்திகா(15), தாரணி (13), யோகலட்சுமி (7), அபிநிதி (5) மற்றும் எட்டு மாத கைக்குழந்தை என தனது ஐந்து பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநதி, எட்டு மாத கைக்குழந்தை ஆகிய மூன்று குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதால், கடந்த 23ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதனை அடுத்து, ஏழு வயது சிறுமி யோகலட்சுமி மட்டும் தற்போது பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபிநிதி மற்றும் 8 மாத கைக்குழந்தை ஆகிய இரண்டு குழந்தைகளும், தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று (செப்.27) இரவு ஐந்து வயது சிறுமி அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை அடுத்து, தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், சிவராஜ் பேட்டை பகுதியின் அனைத்து தெருக்களிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் நன்னீரில்தான் டெங்கு வேகமாக பரவும் என்றும், அவற்றை மூடி போட்டு மூடி வைக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், சிவராஜ் பேட்டையில் கழிவுநீர் செல்வதற்கான கால்வாய்கள் அனைத்தையும் தூர்வார உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் பேட்டையில் ஐந்து வயது குழந்தை டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்ததை அடுத்து, இந்த பகுதியில் மருத்துவ முகாம் நடத்த உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், "பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் டெங்கு பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நன்னீரில்தான் டெங்கு கொசு முட்டையிடும். ஆகவே, பொதுமக்கள் அனைவரும் நீரை மூடி போட்டு மூடி வைக்க அறிவுறுத்தப்படுகிறது.
காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். டெங்குவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கழிவுநீர் செல்வதற்கான அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்படும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்த சிறுமிக்கு நிவாரணம் கிடைக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அது குறித்து அரசிடம் பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், பொதுமக்களும் அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: "உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்