சென்னையைச் சேர்ந்த சந்திரமௌலி, ஓசூரில் தனது மகன் வேணுகோபாலுக்கு நேற்று (ஜூன்.27) நிச்சயதார்த்தம் செய்து விட்டு காரில் தனது மனைவி வசுந்தரா தேவி(45), தந்தை கண்ணையன்(94) மற்றும் மகனுடன் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.
நிச்சயதார்த்தம் முடிந்து திரும்புகையில் நேர்ந்த துயரம்
அப்போது திருப்பத்தூர், செங்கிலிக்குப்பம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே வேணுகோபால், கண்ணையன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் காவல் துறையினர், விபத்துக்குள்ளான வசுந்தரா தேவி மற்றும் சந்திரமௌலியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் வசுந்தரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
மேலும் சந்திரமௌலி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நிச்சயதார்த்தம் செய்து விட்டு வீடு திரும்பியவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு: இளைஞர் கைது