திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, வாணியம்பாடி மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா பரவல் கடந்த சில நாள்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் மருத்துவ முகாம்களில், 100 நபர்களுக்கு இன்று(ஆக.21) ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் இன்று ஒருவர் உயிரிழந்த தை அடுத்து மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 100 பேருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவர்களது சளி, ரத்த மாதிரிகள் தஞ்சை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. கோவிட்-19 பாதிப்பிற்குள்ளானவர்களின் குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பத்தூர் மாவட்டத்தில், இதுவரை 2 ஆயிரத்து 394 பேர் பாதிக்கப்பட்டும், 1 ஆயிரத்து 781 பேர் குணமடைந்து வீடு திரும்பியும் உள்ளனர். 3 ஆயிரத்து 571 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் தற்போது வரை 48 ஆயிரத்து 882 பேருக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது 563 பேர் அரசு மருத்துவமனை உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.