திருப்பத்தூர்: வாணியம்பாடி திம்மாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவா (40). இவரது மனைவி சரஸ்வதி(34). இவர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குடும்பக்கட்டுப்பாடு செய்வதற்காக வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சரஸ்வதி கைக்குழந்தையுடன் தன் கணவர் சிவாவின் சகோதரி சுமித்ரா (40) மற்றும் அவரது மகன் திருப்பதி(23) ஆகிய நால்வரும் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது திருப்பத்தூர் அருகே துரை நகர்ப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அரசு பேருந்தில் மோதி நிலைதடுமாறி நான்கு பேரும் கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரம் சுமித்ராவின் தலைமீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மற்ற மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டுத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூர் நகர காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பத்தூர் வாணியம்பாடி முக்கிய சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தினம் ஒரு சாலை விபத்துகள் நடப்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:30க்கும் மேற்பட்ட இடங்களில் திருட்டு - முதியவர் கைது