திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் (25) என்ற இளைஞரும் நாட்றம்பள்ளி பச்சூர் பகுதியை சேர்ந்த ரத்தினம் (45) என்பவரும் ஒன்றாக மின்னூர் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் பணியாற்றி வருகின்றனர்.
காவல்துறையில் சேர வேண்டும் என்ற முனைப்புடன் இருந்த லோகநாதனும், ரத்தினமும் சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என சமூக வலைதளங்களில் வந்தத் தகவலின் பேரில் இருவரும் ஒன்றாக செங்காந்தள் பூ செடியின் கிழங்கை நேற்று சாப்பிட்டுள்ளனர்.
அப்பொழுது இருவருக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் இருவரையும் சிகிச்சைக்காக அவர்களது உறவினர்கள் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் லோகநாதன் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும், ரத்தினத்திற்கு வேலூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்நிகழ்வு குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக லோகநாதனின் உறவினர்கள் பேசுகையில், போலீஸ் கான்ஸ்டபிளாக வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்த லோகநாதன் உடற்பயிற்சியில் தவறாது ஈடுபடுவார் என கூறியுள்ளனர். உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைவதற்காக கட்டுமஸ்தாக உடலை பராமரித்து வந்தார் எனவும், வாட்ஸ் ஆப்பில் வந்த தகவலால் விபரீதத்திற்குள்ளாகியிருப்பதாகவும் வேதனையுடன் கூறினர்.
தற்கால ஆன்லைன் யுகத்தில் வாட்ஸ் - ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலி மற்றும் வதந்தி செய்திகளின் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. வெகுஜன மக்கள் எவரும் அதில் வரும் செய்தியை சரியானதா என உறுதிப்படுத்த தவறுவதால் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகி வருவது தொடர் கதையாக நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: Rajiv Gandhi murder case: நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!