தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’பேரறிவாளன் வீட்டு பந்தல் வாடகையை எப்ப தருவீங்க?’ - பதறவைத்த பந்தல் அமைப்பாளர்

பேரறிவாளன் வீட்டுக்கு பந்தல் அமைத்த வாடகையை தராமல் இழுத்தடித்த காவலர்கள் மீது, அவர்கள் பணிபுரியும் காவல் நிலையத்துக்கே சென்று புகாரளித்த பந்தல் அமைப்பாளரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரறிவாளன்
பேரறிவாளன்

By

Published : Jul 24, 2021, 9:07 PM IST

திருப்பத்தூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். தற்போது பிணையில் வந்துள்ள அவர், ஜோலார்பேட்டையிலுள்ள தனது வீட்டில் தங்கியிருக்கிறார்.

இந்நிலையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக காவலர்களுடைய வேண்டுகோளின்படி, பேரறிவாளன் வீட்டுக்குப் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவர் பந்தல் அமைத்து மின்விளக்கு வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். இதற்கான வாடகைப் பணத்தை காவல் துறையினர் தருவதாக சம்பத்திடம் கூறியுள்ளனர். ஆனால், ஐம்பது நாட்களைக் கடந்தும் வாடகைப் பணத்தை காவல் துறையினர் தரவில்லை.

பந்தல் வாடகை கேட்டு காவலர்கள் மீது புகார்

இதனால் கோபமடைந்த சம்பத், ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கே சென்று அங்கு பணிபுரியும் காவலர்கள் மீதே புகாரளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ‘‘கடந்த மே 28ஆம் தேதி முதல் பேரறிவாளன் வீட்டின் முன்பு பந்தல், நாற்காலிகள், மின்விளக்கு வசதி ஆகியவற்றை அமைத்துக் கொடுத்துள்ளேன். நேற்று வரை (ஜூலை 23) அதற்கான வாடகை பாக்கி மொத்தமாக ரூ. 45 ஆயிரம் ஆகிறது. ஆனால், ரூ. 11 ஆயிரம் மட்டுமே இதுவரை தரப்பட்டுள்ளது. மீதி தொகையை எப்போது தருவீர்கள்?’’ என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தங்கள் மீதான புகார் என்பதால் முதலில் மனுவை வாங்க மறுத்த காவலர்கள், விவகாரம் உயர் அலுவலர்களுக்கு சென்றவுடன் புகாரை வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஓரிரு நாளில் மீதி தொகையை கொடுத்துவிடுவதாக சம்பத்திடம், காவல் துறையினர் உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காவலர்கள் மீது புகாரளித்த பந்தல் அமைப்பாளரின் செயல், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுத்தர சிறப்பு குழு - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

ABOUT THE AUTHOR

...view details