திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது. இங்குள்ள படகு சவாரி, பூங்கா, டிரக்கிங், பறவைகள் சரணாலயம் போன்றவற்றைக் காண்பதற்குப் பெருநகரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்துசெல்வது வழக்கம்.
கரோனா காலத்தில் சுற்றுலாத் தலங்களுக்குப் பார்வையாளர்கள் வருவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வழக்கம்போல வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏலகிரி மலைக்கு வந்துசெல்வது அதிகரித்துள்ளது.
ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சாலையில் பயணிக்கும்போது, அப்பகுதிகளில் சுற்றிக்கொண்டிருக்கும் குரங்குகளுக்கு ஏராளமான உணவுப் பண்டங்கள், பழங்கள் போன்றவற்றை சாலைகளில் வைத்துவிட்டுச் செல்கின்றனர்.
அந்த நேரத்தில் வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும் பொழுதே உணவுப் பண்டங்கள், பழங்களை வீசிவிட்டுச் செல்வதால், அதை எடுப்பதற்கு குரங்குகள் கூட்டம் கூட்டமாக வரும் சமயத்தில் வாகனங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருப்பதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேரிடுகின்றது.
அப்படி சில நாள்களுக்கு முன்பு வாகனத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்துபோன குரங்கு குட்டியை, அது இறந்ததுகூட தெரியாமல் தாய் குரங்கு தன் கூடவே தரதரவென்று இழுத்துக்கொண்டு அலையும் காட்சி சாலையில் கடந்துசெல்வோரை கண்கலங்கச் செய்தது. தற்போது அதேபோல் மற்றொரு குரங்கு விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர்விட்ட சம்பவமும் அரங்கேறியிருக்கிறது.