திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் பல ஆண்டுகளாக ஃபுளோரின்ட் என்ற தனியார் காலணி தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஃபுளோரின்ட் தொழிற்சாலை திடீரென மூடப்பட்டது. மூடப்பட்ட இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வந்துள்ளனர்.
ஆகையால், தங்களுக்கு வழங்க வேண்டிய வைப்புத்தொகை மற்றும் பணிமுடிப்புகணக்கு தொகை (செட்டில்மென்ட்) பணத்தை வழங்ககோரி தொழிற்சாலை நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர். எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று காலை தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில், இத்தொழிற்சாலையில் பணியாற்றிய 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய வைப்பத்தொகையும், பணிமுடிப்பு கணக்கு பணத்தையும் உடனடியாக வழங்க வேண்டி தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, உடனடியாக இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: காப்பு கட்டும் ரசீதில் முறைகேடு: நத்தம் மாரியம்மன் கோயில் எழுத்தரை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை