திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வாணக்காரதோப்புப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை தேவைகளான குடிநீர், கழிவு நீர், கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட முறையான வசதிகள் இல்லையெனவும், வாணக்காரதோப்புப் பகுதி மக்களுக்கு குடிநீர் அவ்வப்போது மட்டுமே ஊராட்சி மன்ற நிர்வாகம் விடுவதாகவும் கூறுகின்றனர்.
அதுவும் ஒரு சில நேரங்களில் உப்பு தண்ணீர் வழங்குவதாகவும், இதனால் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்பகுதிக்கு பொது கழிப்பிடம் கட்டித்தரக்கோரி ஊராட்சி மன்ற நிர்வாகம் முதல் மாவட்ட நிர்வாகம் வரை, பலமுறை மனு அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த வாணக்கார தோப்புப் பகுதிமக்கள், அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு வாயில் கறுப்பு மாஸ்க் அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் மற்றும் ஆம்பூர் நகர காவல்துறையினர் மற்றும் தேவலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி குபேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.
அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி திட்டம்) கிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின் வாணக்கார தோப்புப் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.