கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை திருப்பத்தூர்மாவட்டம், முழுவதும் திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுபானக் கடைகள் இயங்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ஆம்பூர் புறவழிச்சாலையில் இயங்கிவரும் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பாரில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், புறவழிச்சாலை பகுதியில் டாஸ்மாக் பாரில் மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த கார்த்திக் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, கார்த்திக்கை வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் கைது செய்து 1 மணி நேரத்திலேயே மதுபானப் பாட்டில்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பார் உரிமையாளரான கார்த்திக்கிடம் ஒப்படைத்த கலால் காவல் துறையினர் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் கைதான தகவல் புகைப்பட ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் பரவியதால் காவல் துறையினர் செய்வதறியாது திகைத்த நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக கார்த்திக்கை கைது செய்து காவல் துறையினர் கொடுத்து அனுப்பிய அனைத்து மதுபான பாட்டில்கள் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொலை