ஒடிசா ரயில் விபத்தில் ஏற்பட்ட காயத்திற்கு தமிழக அரசு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை காயமடைந்தவர் குற்றச்சாட்டு!! திருப்பத்தூர்: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கடந்த ஜூன் 2ஆம் தேதி கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் என 3 ரயில்கள் மோதி பயங்கர விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ரயில் விபத்து ஏற்பட்ட பின்னர், தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஒடிசா சென்று மீட்பு நடவடிக்கை தொடர்பாக அம்மாநில முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதேநேரம், ஒடிசாவில் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல், சென்னைக்கு ஒடிசாவில் இருந்து சிறப்பு ரயிலில் அழைத்து வரப்பட்டவர்களுக்கு சென்னையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் குருசலாப்பட்டைச் சேர்ந்த காந்தி என்பவர் தமிழ்நாட்டில் இருந்து வங்காளதேசம் நாட்டிற்கு சென்று அங்கு தனியார் கம்பெனியின் லாரி சேஸ்களை எடுத்துச் செல்லும் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார்.
இவர் ஒடிசாவில் ரயில் விபத்து சம்பவம் நடைபெற்ற அன்று ஹவுராவில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு திரும்பி உள்ளார். அப்போது ஒடிசா அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி காந்திக்கு இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காயம் அடைந்த அவரை மீட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், சிறப்பு ரயில் மூலமாக சென்னைக்கு அனுப்பி உள்ளனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட காந்தி, சென்னையில் எந்த விதமான மருத்துவ உதவிகளும் செய்யாமல் தன்னை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்து அனுப்பியதாகவும், அதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு தற்போது சொந்த ஊர் திரும்பியதாக கூறி உள்ளார்.
மேலும், இதுவரை தமிழ்நாடு அரசு சார்பாக எந்த விதமான உதவியும் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள அவர், இது குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க:ரயில்வே சிக்னலை உடைக்க இளைஞர் முயற்சியா? - திருப்பத்தூரில் பரபரப்பு!