திருப்பத்தூர்: அருகே நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமம் மணியகார் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சுவேதா 22. இவர்களுக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், ராஜேஷ் - சுவேதா இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுவேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே, சுவேதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் சுவேதாவின் உடலை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கி வந்து தேசிய நெடுஞ்சாலையில் வைத்து, சுவேதாவின் சாவிற்கு காரணம் மாமனார், மாமியார் மற்றும் அவருடைய கணவர் தான் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.