வட்டாட்சியர் அலுவலகத்தில் 2-வது நாளாக பட்டியல் இன சான்றுகோரி குறவர் மாணாக்கர்கள் போராட்டம் திருப்பத்தூர்வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ரவி தலைமையில் எஸ்.சி. சான்றிதழ் கேட்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி சீருடையில் நேற்று காலை முதல் தற்போது வரை பள்ளி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைகள் (திருத்தப்பட்ட) சட்டம் 1976 வரிசை எண் 36இன் படி குறவன் இனத்துக்கான பட்டியல் வகுப்பு சான்றுக்கு, ஆன்லைனில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட அனைவருக்கும் குறவன் (எஸ்.சி) சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 460 பெற்றோர்கள் எஸ்.சி. சாதிச் சான்றிதழ் இருந்தும் அவருடைய பிள்ளைகளுக்கு சாதிச் சான்றிதழ் கொடுக்காமல் அதிகாரிகளும்; அலைக்கழித்து வருகிறார்கள் எனக் கூறி நேற்றிலிருந்து இன்று வரை தற்போது 2-வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேரம் மற்றும் தற்போதும் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே உணவு செய்து சாப்பிட்டு, அங்கேயே மக்கள் உறங்கியும் வருகின்றனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் உடனடியாக திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், அனைத்து குறவர் இன மக்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களா என கண்டறியவும், அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தாசில்தார்கள் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்களின் பகுதிகளுக்கே சென்று ஆய்வு மேற்கொண்டு உடனடியாக அவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கவும் ஆணையிட்டார்.
அதன் காரணமாக திருப்பத்தூர் நாட்றம்பள்ளி வாணியம்பாடி உள்ளிட்டப் பகுதிகளில் தாசில்தார்கள் தலைமையில் இரவு நேரம் என்றும் பாராமல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூரில் ராச்சமங்கலம், பஞ்சனம்பட்டி, உள்ளிட்டப் பகுதியில் திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி மற்றும் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர், இரவு நேரம் என்றும் பாராமல் குறவர் இன மக்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுடைய சாதிச் சான்றிதழ் வாங்கி சரி பார்த்து வரும் வேலையை செய்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவால், இரவு நேரங்களில் பணி செய்யும் நிலைமை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது இரண்டாவது நாளாக பள்ளி மாணவ மாணவிகள் சீருடையில் அமர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக தம்பியை கல்லால் தாக்கும் அண்ணன் - பரபரப்பு வீடியோ