திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் ஓமகுப்பம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திருமூர்த்தியின் மகன் தினேஷ் (14). இவர் மிட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பிற்கு தேர்ச்சியடைந்தார். கரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள் திறக்கவில்லை. பள்ளிகள் திறக்க சில காலங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட்போன்கள் என அழைக்கப்படும் ஆன்ட்ராய்டு போன்கள் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. இந்நிலையில், ஆன்ட்ராய்டு போன் இல்லாததால், தினேஷால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை.
மாணவர் தினேஷ் தனது தந்தையிடம் ஆன்ட்ராய்டு போன் வாங்கித் தருமாறு நச்சரித்துள்ளார். கூலித்தொழிலாளியான திருமூர்த்தியிடம் காசு இல்லாததால், போன் வாங்கிக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், மன விரக்தியடைந்த தினேஷ் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.