திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வருகின்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தங்க பாண்டியன் தலைமையில், ஆம்பூர் வர்த்தக மையத்தில் இன்று (நவ. 18) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய இருக்கும் ஆசிரியர்கள், வருவாய் அலுவலர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சில் கலந்துகொண்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், கடந்த தேர்தல்களைவிட இந்தத் தேர்தலில் பல்வேறு மாற்றங்கள் இருப்பதாகவும், வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் வாக்காளர்களின் ஆவணங்கள் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்டவைகளை நேரடியாக சென்று களப் பணியில் ஈடுபட வேண்டும் எனவும், மேலும் இந்தத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்த இருப்பதால் அவர்களின் வயது வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து செயல்பட வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, நகராட்சி ஆணையாளர் சௌந்தரராஜன், வட்டாட்சியர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.