திருப்பத்தூர்: தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு மற்றும் ஆய்வு மாணவர்கள் தரணிதரன், கிருஷ்ணகுமார், விஷ்ணு, ஞானவேல் ஆகியோர் திருப்பத்தூர் அருகிலுள்ள மூக்கனூர் பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வில் வைணவக் கோயில்களுக்கு நிலக்கொடை கொடுத்ததற்கான ஆவணமாக அறியப்படும் குறியீடுகள் அடங்கிய கல்வெட்டினை கண்டறிந்தனர்.
இது குறித்து முனைவர் ஆ.பிரபு கூறுகையில், “பொதுவாகப் பழங்காலத் தமிழ்நாட்டை ஆட்சிபுரிந்த மன்னர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள் தங்களது ஆட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்குவது மரபு.
அவ்வாறு வழங்கும் கொடைகளுக்குச் சான்றாகக் கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் வாயிலாக எழுத்துப்பூர்வ அதிகாரத் தகவல்களைத் தெரிவிப்பர். அவ்வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டுக்கள், செப்புப்பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் பல கண்டறியப்பட்டுள்ளன.
நிலக்கொடைக் குறியீடுகள் அடங்கிய 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இந்நிலையில் திருப்பத்தூர் வட்டாரத்தில் பழந்தமிழரின் வாழ்வியல் பதிவுகளை விவரிக்கும் எண்ணற்ற தடயங்கள் அண்மைக்காலத்தில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் திருப்பத்தூரை அடுத்த மூக்கனூர் பகுதியில் நாங்கள் கள ஆய்வு மேற்கொண்டோம்.
இங்குள்ள ’மேலக்குட்டை ஏரியின்’ கீழ்புறம் தனபால் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் நடுவே இயற்கையாக அமைந்துள்ள சிறிய பாறையில் குறியீடுகள் பல இருப்பதனைக் கண்டறிந்தோம். முக்கோண வடிவமுடைய பாறையில் சூரியன், பிறைச் சந்திரன் உருவங்கள் மேற்புரமும் கீழே குடையும் அருகே கமண்டலமும் அமைந்துள்ளன. இவற்றில் அருகே அளவு கோலும், பாதங்களும் காட்டப்பட்டுள்ளன.
இக்குறியீடுகள் திருமாலின் வாமன அவதாரத்தினைக் குறிப்பிடுவதாகும். பொதுவாகச் சாசனங்கள் எழுத்து வடிவில் பொறிக்கப்படுவது மரபு. இதற்கு மாறாக இங்கே கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளன. இந்தக் கோட்டோவியக் கல்லானது ஒருவர் தமது ஆட்சிக்குள்பட்ட நிலத்தினை வைணவக் கோயிலுக்காகக் கொடையாகக் கொடுத்த விபரத்தினை இக்குறியீடுகள் சுட்டுக்காட்டுகின்றன.
16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இங்குள்ள ஓவியத்தில் மேலுள்ள சந்திர சூரிய உருவங்கள் இக்கொடைக்குச் சாட்சிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவை உள்ளவரையிலும் என்று பொருள்படும். இக்கோட்டோவியக் கல்லானது கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது.
இக்கோட்டோவியம் இவ்வட்டார வரலாற்றுப் பின்புலத்தினைப் பறைசாற்றும் சிறப்புக்குரிய ஆவணமாகும். இது போன்ற வரலாற்றுத்தடயங்களைப் பாதுகாக்க தொல்லியல் துறையினரும் மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:பத்திரப்பதிவில் போலி ஆவணத்தை ரத்துசெய்ய பதிவாளருக்கு அதிகாரம்!