ஷேர் ஆட்டோ- அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், பெரியகரம் மற்றும் கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பத்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் கோத்தலக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் மேளம் அடிக்க சென்றுள்ளனர். இன்று (ஜூன் 15) அதிகாலை தபால்மேடு பகுதியில் துக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு மேளம் அடிக்க ஷேர் ஆட்டோ மூலம் பத்து இளைஞர்கள் கந்திலி வழியாக திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் சென்றனர்.
இதையும் படிங்க: ஆந்திரா: சாலையைக் கடக்க முயன்றபோது லாரி மோதியதில் 3 யானைகள் பலி
அப்போது அவ்வழியாக பெங்களூரிலிருந்து - திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஷேர் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கி சாலையில் கவிழ்ந்ததில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சாரதி (20), கார்த்திக் (18), அரவிந்தன் (20) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர்.
மேலும், ஷேர் ஆட்டோவில் பயணித்த மற்ற இளைஞர்களான ஈஸ்வரன், அரவிந்தன் வினோத்குமார், வேலு, சஞ்சய் மற்றும் அஜித் ஆகியோர் படுகாயம் அடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கந்திலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:அண்ணாமலை பேச்சு ஆய்வு செய்யப்படவேண்டிய விஷயம்: திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்!
இந்நிலையில், பெங்களூருவில் இருந்து திருப்பத்தூருக்கு அரசுப்பேருந்தை இயக்கி வந்த சிவராமன் எதிரே வந்த ஷேர் ஆட்டோவின் மீது மோதி, மூன்று பேர் உயிர் இழந்தததாகக் கூறியும், சிவராமனை கைது செய்ய கோரியும், உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உயிரிழந்த இளைஞர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அறிந்து வந்த திருப்பத்தூர் நகர போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
போலீசாரின் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்ட உடன் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் சிக்கி மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:Police Custody: செந்தில் பாலாஜிக்கு போலீஸ் காவல் கேட்ட மனு தள்ளுபடி!