திருப்பத்தூர்:வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டு விவசாயிகள், தங்களின் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு வரும் பட்டு கூடுகளை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு பகுதியில் இயங்கி வரும் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நிர்ணயிக்கப்படும் விலைக்கு விற்று வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இங்கு விவசாயிகள் கொண்டுவரும் கூடுகளை எடுக்காமல் அலைகழிப்பு செய்து வருவதாக கூறி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பட்டுவளர்ப்பு விவசாயி கோவிந்தசாமி கூறுகையில், "விவசாயிகள் கொண்டுவரும் கூடுகளை எடுக்காமல் அலைகழிப்பு செய்து வருகின்றனர். மற்ற மாவட்டங்களில் நிர்ணயிக்கப்பட்டு எடுக்கும் விலையை விட குறைவான விலைக்கு இங்கு எடுக்கின்றனர். இங்குள்ள அலுவலர்களின் அலட்சியத்தால் வாடிக்கையாளர்களை தொடர்பில் வைத்துக்கொள்ளாமல், ஒருசில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படுகிறது. எனவே, அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு கூடுகளை அளிக்கக் கூடிய நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் திட்டங்கள், சலுகைகள் பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அரசு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டு நூற்பாலை இயந்திரம் அமைத்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தாமல் பட்டு விவசாயிகள் கொண்டுவரும் கூடுகளை திருப்பத்தூர் பகுதியில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதால் பட்டு வளர்ப்பதற்கான மூலதனப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதேசமயம் அதற்கான உரிய வருவாய் கிடைப்பதில்லை. இதில் அரசு உடனடியாக தலையிட்டு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த பெருமை இந்தியாவுக்கு உண்டு' கவிஞர் வைரமுத்து