திருப்பத்தூரில் வீரப்பனுக்கு ஆதரவாக சீமான் பேச்சு திருப்பத்தூர்:தமிழகம் முழுவதும் தேர்தல் கள தயாரிப்பு நிகழ்விற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (அக்.13) திருப்பத்தூர் மாவட்டம் கிருஷ்ணகிரி சாலை அருகே அமைந்துள்ள தனியார் திருமண வளாகத்தில் கள தயாரிப்பு நிகழ்விற்காக தன்னுடைய கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்க வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்கள் உடனான சந்தித்திப்பில், மாதனூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது வரை பதவி ஏற்காமல் இருக்கும் தலித் பெண் குறித்து பேசிய அவர், “நீங்கள் தானே சொல்கிறீர்கள் சனாதனத்தை ஒழிப்போம், இது பெரியார் மண், சகோதரத்துவம், சமூக நீதி என்றெல்லாம் பேசுகிறீர்கள்.
ஒரு தலித் பெண் தேர்தலில் வெற்றி பெற்றும், தற்பொழுது வரை அவருக்கான பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை. உங்கள் சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், எல்லாம் வெறும் கனவாக இருக்கிறது. இது அந்த தங்கைக்கு மட்டும் ஏற்பட்ட அவமானமாக நான் கருதவில்லை. ஒரு தேசிய இனத்திற்கான, ஒவ்வொருவருக்குமான அவமானமாகத்தான் கருதுகிறேன்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சந்தன மரங்களின் வளம் தான் இந்த மாவட்டத்திற்கான (திருப்பத்தூர்) வருவாயாக இருந்தது. தற்பொழுது சந்தன மரங்கள் இல்லை. வனத்துறை அமைச்சர்கள் மீண்டும் சந்தன மரங்களை வளர்ப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். எங்க ஆளு (சந்தன கடத்தல் வீரப்பன்) இருக்கும் வரையில் காட்டிலுள்ள மரங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருந்தது. காவிரி பிரச்சனை போன்ற நிலை எல்லாம் இல்லாமல் இருந்தது.
சந்தன மரத்தை வெட்டினார், யானை தந்தத்தைக் கடத்தினார் என அவர் மீது பழி சுமத்தினார்கள். அவர் இருக்கும் வரை காடு பாதுகாப்பாக இருந்தது. நாகப்பாவை தூக்கத்தெரிந்த வீரப்பனுக்கு, நயன்தாராவை தூக்கத் தெரியாதா? அவர் அப்படியெல்லாம் செய்யவில்லை. ஏனென்றால் அவர் தமிழ் மாண்பு உடையவர்” எனக் கூறினார். மேலும் வன பாதுகாப்பு குழு காற்றில் சந்தன மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ராஜா தேசிங்கு தலைமையில் செந்தமிழ் சீமான் கலந்தாய்வுக்கு தலைமை தாங்கினார். அதேபோல் ஜோலார்பேட்டை தொகுதி செயலாளர் ரவீந்திரன், மாநில பொறுப்பாளர் பிரதீப், மகளிர் பாசறை சார்பாக சுமதி அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்க கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
இதையும் படிங்க:குமரியில் விவசாய நிலத்தை தரிசாக மாற்றித்தர லஞ்சம்: பெண் துணை தாசில்தார் கைது!