திருப்பத்தூர்:வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவர் விஜய், அண்ணன் தம்பிகளான 6 ஆம் வகுப்பு மாணவர் சூர்யா, 8 ஆம் வகுப்ப்பு மாணவர் ரபீக் ஆகியோர் ஒன்றாக கிரிசமுத்திரம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
இதனிடையே, வளையாம்பட்டு மேம்பாலம் அருகே சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு சர்வீஸ் சாலையில் பாய்ந்தது. இவ்வாறு தறிக்கெட்டு ஓடிய அந்த கார், அவ்வழியாக சென்று கொண்டிருந்த 3 பள்ளி மாணவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதனைக் கண்ட மற்ற மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அந்த மூன்று பள்ளி மாணவர்களும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து, அந்த காரிலிருந்த ஓட்டுநர் உட்பட 2 பெண்களும் காரை விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில், இது குறித்து அறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர் அங்கு அலறியடித்த படி ஓடிவந்து சடலமாக கிடந்த தங்களின் பிள்ளைகளைக் கண்டு துடித்தனர்.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்தில் திரண்ட பொதுமக்களும், பள்ளி மாணவ மாணவியர்களும் அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு விரைந்த வாணியம்பாடி தாசில்தார், காவல் உதவியாளர் நாகராஜன் உள்ளிட்ட போலீசார் உள்ளிட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்ய வேண்டும், இந்த சாலையை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.