திருப்பத்தூர்:திருப்பத்தூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியின் ஆணையராக திருநாவுக்கரசு என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் பொதுமக்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து நேரில் புகார் மனு அளிக்க சென்றால் அதனை வாங்காமல் அலட்சியப் படுத்துவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 14ஆவது வார்டு மற்றும் 30வார்டுக்கு நடுவே ரயில்வே தரைபாலம் அமைந்துள்ளது. இந்த தரைபாலத்தின் வழியாக திருப்பத்தூரிலிருந்து புதுப்பேட்டை, நாட்றம்பள்ளி மற்றும் சென்னை - பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பிரதான வழியாக உள்ளது.
இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் அங்கிருக்கும் தரைப்பாலத்தில் மழைநீருடன் பாதாள சாக்கடை நீரும் கலந்து குளம் போல் கழிவுநீர் தேங்கி வருகிறது.
இதனை மின் மோட்டார் மூலம் அப்புறபடுத்தாமல் நகராட்சியில் பணிப்புரியும் தூய்மை பணியாளர்களை கொண்டு அப்புறப்படுத்துகின்றனர். மேலும், அவர்களுக்கு கையுறை, காலணி உள்ளிட்ட உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீரை கைகளால் அகற்றினர். இதனால் தூய்மை பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.