வேலூர் மாவட்டம் காட்பாடி வன்டறதாங்கல் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஜானி (33). இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு வேலூர் மத்திய சிறையில் இருந்து நிபந்தனை பிணையில் வெளியே வந்தார். 43 வழக்குகளில் தொடர்புடைய இவர் மீண்டும் சிறைக்கு செல்லாமல் தலைமறைவானர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தேடப்படும் குற்றவாளியாக ஜானி அறிவிக்கப்பட்டார். அவரது பெயர் என்கவுன்ட்டர் பட்டியலிலும் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே தலைமறைவாக இருந்த ஜானியை பிடிக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின் பேரில் 3 சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், ரவுடி ஜானி பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், பெங்களூரு சென்ற தனிப்படை காவல்துறையினர், ஜானி பதுங்கியிருக்கும் இடத்திற்கு சென்றனர். அப்போது, அவரும் உடன் இருந்த ஜானியின் மைத்துனர் மைக்கேலும் தப்பிச் செல்ல முயன்றதால், காவல் துறையினர் துப்பாக்கி முனையில் விரட்டி பிடித்து அவர்களைக் கைது செய்து வேலூர் அழைத்து வந்தனர்.