திருப்பத்தூர்:முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடியில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் நேற்று (மே 21) சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நளினியுடன் நடந்த சந்திப்புக்கு பிறகு வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இந்த வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால், தற்போது பேரறிவாளன் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் 6 பேரின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது நளினி, முருகனுக்கு பெரும் நம்பிக்கையை தந்திருக்கிறது.
நளினியை சந்திப்பதற்கு முன்னதாக முருகனை மத்திய சிறையில் சந்தித்தேன். 6 நாள் பரோல் விடுப்பு கேட்டு முருகன் கடந்த 19 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். சிறைத்துறை அதிகாரிகள் 6 நாள் பரோல் விடுப்பு வழங்குவதாக உத்திரவாதம் அளித்ததைத் தொடர்ந்து அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டு இருக்கிறார்" என்றார்.
நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர் சந்திப்பு மேலும், இந்த வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், இலங்கையைச் சேர்ந்தவர்கள் என பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை பலமுறை கோரிக்கை விடுத்தும் ஒருமுறை கூட பரோல் வழங்கப்படவில்லை.
தற்போது உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காத வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்” என பதிலளித்தார்.
இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை ? - முதலமைச்சர் ஆலோசனை