திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் தார்வழி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அதே பகுதியில் மலையடிவாரத்தில் உள்ள நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ஜெயக்குமார் குத்தகைக்கு எடுத்துள்ள நிலத்தில் வனவிலங்குகள் சேதப்படுவதாக கூறி, தனது மைத்துனர் வெங்கடேசன் என்பவருடன் விலங்குகளை விரட்டுவதற்காகச் சென்றுள்ளார்.
அப்பொழுது, ராம மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், வனவிலங்குகளை விரட்ட அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் இருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ஜெயக்குமார் மற்றும் வெங்கடேசன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதன் பின்னர், வெகுநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், இருவரையும் தேடியுள்ளனர். அப்போது ராம மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் சென்று பார்த்த போது, இருவரும் மின்வேலியின் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.