திருப்பத்தூர்: ஆம்பூர் கம்பிக்கொல்லையைச் சேர்ந்தவர் விஜய். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி. பாக்கியலட்சுமி 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனால் அவர் கடந்த 9 மாதங்களாக ரெட்டித்தோப்பு நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்து வந்துள்ளார். அதேபோல் நேற்றும் (ஜன.24) வழக்கம்போல் ரெட்டித்தோப்பு நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், குழந்தை நன்றாக இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால் வயிற்றில் எவ்வித அசைவும் இல்லையெனக் கூறிய பாக்கியலட்சுமி, தனது குடும்பத்தினருடன் வாணியம்பாடி அரசு மருத்துவனைக்குச் சென்றுள்ளார். அங்குக் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பாக்கியலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், குழந்தையை இறந்த நிலையில் மீட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ஆம்பூர் ரெட்டித்தோப்பு நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பாக்கியலட்சுமிக்கு முறையான மருத்துவ ஆலோசனை வழங்கவில்லை என கூறி, உயிரிழந்த 9 மாத சிசுவின் உடலை பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு ஆரம்பச் சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். அதேபோல் ஆம்பூர் - நாயக்கனேரி சாலையில் அமர்ந்து சாலை மறியில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.