திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள உதயேந்திரம் பேரூராட்சிக்குள்பட்ட பாரதி நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. அப்பகுதி மக்கள் இயற்கை உபாதை கழிக்கச் செல்ல வேண்டும் என்றால் அங்குள்ள பாலாற்றுப் பகுதிக்குச் சென்றுவந்தனர்.
இந்நிலையில் அவர்களின் பயன்பாட்டிற்காக உதயேந்திரம் பேரூராட்சி சார்பில் 2018ஆம் ஆண்டு தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் 6.80 லட்சம் மதிப்பீட்டில் ஆறு கழிவறைகள் கொண்ட பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டு மின் இணைப்பு, தண்ணீர் போன்ற எந்த அடிப்படை வசதியும் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது.
தண்ணீர், மின் வசதி இன்றி பொதுமக்கள் அந்தக் கழிவறையைப் பயன்படுத்தாமல் இயற்கை உபாதை கழிக்கச் செல்ல பாலாற்றுப் பகுதிக்குச் சென்றுவந்தனர். தற்போது தொடர்மழை காரணமாக வெள்ளம் வந்து தண்ணீர் நிரம்பியுள்ளதால் பாலாற்றில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு கடந்த வாரம் ரித்திக் என்ற 12 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.