திருப்பத்தூர் மாவட்டம் சின்னகுளம் மாரியம்மன் கோயில் பகுதியில் கிரீன் பிஎல்பிஎல் என்ற தனியார் சிறுசேமிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை சீரங்கபட்டி பகுதியை சேர்ந்த தண்டபாணியின் மகன் நடராஜன்(42), பாபு ஆகியோர் சில வருடத்துக்கு முன்பு தொடங்கியுள்ளனர்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டார கிராமத்திலுள்ள பொதுமக்களிடம் கமிஷன் மூலம் ஏஜெண்டை உருவாக்கி 500 ரூபாயிலிருந்து, 5 ஆயிரம் ரூபாய் வரை அவரவர் தகுதிக்கு ஏற்ப மாதந்தோறும் பணத் தொகையை கட்டி வந்ததால், ஐந்து வருடம் கழித்து பணத்தை இரட்டிப்பாக கொடுப்பதாக கூறி இவர்கள் பணத்தை வசூலித்து வந்துள்ளனர்.
தங்களுடைய பணம் இரட்டிப்பாகும் என்கிற நம்பிக்கையில் பொதுமக்கள் பலர் இந்த நிறுவனத்தில் பணத்தை செலுத்தி வந்தனர். தற்போது 5 வருடமாகியும், சுமார் 5 கோடி ரூபாய் வரையிலான பணம், தவணையாக கட்டியவர்களுக்கு திருப்பி தராவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து கடந்த ஆண்டு நடராஜன், பாபு ஆகியோர் மீது காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.
அப்போது நடராஜன், பணம் கட்டிய சிலருக்கு அவரவர் பணத்துக்கு ஏற்ற தொகையில் காசோலையை கொடுத்திருக்கிறார். அந்தக் காசோலையை எடுத்துக்கொண்டு வங்கிக்குச் சென்ற வாடிக்கையாளர்கள் வங்கி அலுவலர்களிடம் கொடுத்தபோது சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் அவ்வளவு தொகை இல்லை எனத் திருப்பி அனுப்பி உள்ளனர்.