திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கல்நார்சாம்பட்டி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் எருது விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று (ஜனவரி 18) எருது விடும் திருவிழா மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் காலை 8 மணி முதல் 2 மணி வரை எருது நடந்தது.
இதனிடையே 2.30 மணி அளவில் மாடு முட்டியதில் பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த தவுலத் மகன் முஷரப் (19) என்ற இளைஞர் காயமடைந்தார். இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்ட கிராமத்தினர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞரின் உறவினர்களும், அப்பகுதி இளைஞர்களும் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அடிமந்தையில் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.